# செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1)

விடிந்து விட்டிருந்தது... விஷயம் தெரிந்து கொஞ்ச,கொஞ்சமாய் ஆட்கள் வரத் தொடங்கினர்..உள்ளுரில் இருக்கும் உறவுகாரர்கள்,தெருவாசிகள், இருந்த ஒருசில நண்பர்கள்..வைத்தியின் நண்பர்கள் வட்டம் மிக குறுகியது....காரணம் கல கலன்னு பேசமாட்டார்..அவர் வயதையொத்த ஆசாமிகள் உள்ளுர் அரசியல் முதல் உலக விஷயங்கள் வரை அரட்டை அடிக்கும் போது வைத்தி அதில் கலந்து கொள்ள மாட்டார்..ஆமாம் ,சரி,போயிட்டு வர்றேன்.அவ்வளவுதான் அதிகபட்ச வார்த்தைகள்...... வைத்தி என்றழைக்கபட்ட வைத்தியநாதன் காலமாகி விட்டார்..அந்த காலையிலும் எப்படியோ ஒரு மாலை..... அவரவர் வசதிக்கேற்ப சின்னதும் பெரிசுமாய்......வைத்தியின் தாயார் அலமேலு இன்னும் இருக்கிறாள்.தொண்ணுறு வயசு ..பழுத்த கிழம்..லேசாக பார்வை மங்கல்...அவ்வளவுதான்...மற்றபடி திடகாத்திரமாய் மகள் வீட்டில் இருக்கிறாள்....அநேகமாக வந்து கொண்டிருக்க வேண்டும்....சோகத்தில் பெரிய சோகம்.... புத்திர சோகம்...தன்னை விட்டு கால(ன்)ம் பிள்ளையை அழைத்து கொண்டதை கிழவி எப்படி கதறி தீர்க்க போறாளோ??வாசலில் சிமெண்ட் திண்ணை ஒன்று உண்டு...போதாதற்கு அக்கம் பக்கத்திலிருந்து வந்த பெஞ்சுகள்,நாற்காலிகள்..அந்த சிமெண்ட் பெஞ்சில்தான் வைத்தி கடைசியாக உட்கார்ந்திருந்தார்..பக்கத்தில் நன்கு வளர்ந்த ஒரு பன்னீர் மரம்...மஞ்சள் வண்ண பூக்களை சிந்திய வண்ணம் இருக்கும்..வைத்தியின் முழுநேர பொழுது கழிப்பு அந்த மரம்தான்..அதற்கு அவர் பவானி என்று பெயர் இட்டிருந்தார்..நாள் முழுதும் பவானியுடன் எதேதோ பேசிக்கொண்ட இருப்பார்..கடைசியாக மார்பு வலியை வைத்தி உணர்ந்தது,,,உயிர் போனது எல்லாம் அங்குதான்..பவானி...வைத்தியுடன் கூட வேலை பார்த்தவள்.இருவரும் மனதார விரும்பினார்கள்...ஆனால் ஜாதி குறுக்கே வந்தது..வைத்தி உறுதியாக இருந்தான்..பதிவு திருமணம் செய்து கொண்டு வேறு ஊருக்கு போய் விடலாம் என்றான்..பவானி அதை ஏற்கவில்லை...சாபத்துடன் வாழ்வை தொடங்குவதில் அவளுக்கு விருப்பமில்லை...உன் அப்பாவை சமாதானபடுத்து ..பின் தான் கல்யாணமென்று கூறி விட்டாள்..வைத்தியின் அப்பா”எனக்கொரு நன்றிக்கடன் உண்டு ..அதை நீதான் தீர்க்கவேண்டும்.என்று கூறி விட்டார்....லலிதாவுடன் திருமணம் முடிவாயிற்று...வைத்தியின் மனைவி லலிதா.. கட்டுபெட்டியாய் கணவனுக்கு பணிவிடை செய்ய வந்தவள்...கணவனின் புறக்கணிப்பு அதிர்ச்சியாய் இருந்தது....இயந்திர கதி தாம்பத்யத்தில் ஒரு குழந்தை....அவ்வளவுதான் அவள் கண்ட சுகம்..அந்த மரத்துக்கு அவள் வைத்த பெயர் சக்களத்தி....வைத்தியும் லலிதாவும் பேசி ஆயிற்று பல வருடங்கள்...அரசல் புரசலாக லலிதாவுக்கும் சில விஷயங்கள் தெரிய வந்தது...வைத்தியும், பவானியும் காதலித்தது....தவிர்க்க முடியாமல் தன்னை கல்யாணம் செய்து கொண்டது...சரியாகிவிடும் என்றுதான் நிணைத்தாள்...பவானி திடீர் இறப்பு செய்தி வரும் வரை வரை..அதன் பின் தான் வைத்தி மாறிப் போனான்..மனம் லேசாக சிதைந்து போனது...வாசலில் இருக்கும் மரம் பவானி அவள் கையால் ஊன்றி விட்டு போனதாம்......அந்த மரத்தையே பவானியாக பாவிக்க ஆரம்பித்தான்.. சக்களத்தி என்று ஏசி கொதிக்கிற வென்னீரை அம்மரத்தின் வேரில் ஊற்ற அன்னைக்குலலிதா அக்கம் பக்கம் பார்க்க அடி வாங்கி அவமானபட்டாள்..இருவருக்கும் பேச்சு வார்த்தை சுருங்கி விட்டிருந்தது...ஒரே மகள் சுகுணா கல்யாணமாகி போனதும் சுத்தமாய் நின்று போனது....வைத்தி சாப்பிடுவார்..ரேடியோ கேட்பார்.. இதெல்லாம் மரத்தின் கீழேயே நடக்கும்...மகள் வீடு உள்ளுரிலேயே இருந்ததால் லலிதா அங்கு போய் விடுவாள்...அது ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல்.மணியாகி விட்டிருந்தது...அநேகமாக எல்லாரும் வந்து விட்டிருந்தனர்..சாவு வீடுகளில் கிசுகிசுப்பாக கேட்கப்படும் “எப்போ எடுக்கிறாங்களாம்” கேட்க தொடங்கியது சாஸ்திரிகள் தயாராக இருந்தார்..தென்ன ஓலையை பின்னி கொண்டிருந்தார்கள்...இதென்ன கூத்தாயிருக்கு?லலிதாவுக்கு புத்தி பேதலிச்சுடுத்தா என்ன?அழுதாவது தொலைச்சாளா? சித்த பிரமை புடிச்சா மாதிரின்னா உட்கார்ந்திருந்தா...என்னாச்சு லலிதா என்ன சொல்றா?யார் கொள்ளி போடணும் சொல்றா?லலிதா சொன்னது ...முதல்ல வாசல்ல இருக்கிற அந்த மரத்தை வெட்ட சொல்லுங்க..அந்த கட்டையை வச்சு இந்த கட்டையை எரிங்க....லலிதா குரலில் அத்தனை தீர்க்கம்,தகிப்பு...அம்மா ..உனக்கு பைத்தியம் கீத்தியம் புடிச்சுடுச்சா?அப்பா அதை மரம் சொன்னாலே திட்டுவார்.அதை போய் ஏன் வெட்ட சொல்றே...அப்பா ஞாபகார்த்தமா அது வாசல்லேயே இருக்கட்டும்மா..மணியாய்ட்டே இருக்கு. எல்லாரும் காத்துண்டிருக்கா...லலிதா அசைய வில்லை......மரத்தை வெட்ட ஏற்பாடு பண்ணுங்க..இருக்கிற வரைக்கும் இந்த மனுஷன் அதோட தான் குடும்பம் நடத்தினார்...அவர் போனப்பறம் அந்த சக்களத்தியோட என்னால இருக்க முடியாது...தீர்மானமாக சொல்லிவிட்டாள்..விறகு தொட்டியில் சொல்லி ஆட்கள் அழைத்து வரப்பட்டனர்....சே எவ்வளவு அழகா இருக்கு..இதை வெட்ட எப்படி அவளுக்கு மனசு வந்தது..சாவுக்கு வந்தவர்கள் அங்கலாயித்தனர்....ரெண்டு பேர் பெரிய ரம்பத்தை கொண்டு அறுக்க ஆரம்பித்தனர்..இன்னொருவன் கோடாரியால் கிளைகளை வெட்ட ஆரம்பித்தான்......வைத்தியின் கால் மாட்டில் உட்கார்ந்திருந்தாள் லலிதா....முகத்தில் ஒரு வித ஜொலிப்புடன் இருந்தாள்..இத்தனை வருஷம் ...இந்த பாழாப் போன சமூகத்திற்காக,பெத்த பொண்ணுக்காக அடக்கி வைத்திருந்த அத்தனையும் ... ஒரு ஏளன சிரிப்பில் தொடங்கி பெரிதாக வாய் விட்டு சிரிக்க முனைந்து கேவலாக மாறி அழ ஆரம்பித்தாள்....வெளியே மரத்தை அறுக்கும் ஓசையை மீறி பெருங்குரலில் லலிதாவின் அழுகுரல் கேட்டது...

0 comments: