தனக்கு எதிராக தீர்ப்பு அளித்த "லைன் அம்பயரை' கொலை

யு.எஸ்., ஓபன் அரை இறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தனக்கு எதிராக தீர்ப்பு அளித்த "லைன் அம்பயரை' கொலை செய்து விடுவதாக மிரட்டிய சம்பவம், இதுவரை 11 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அவரது டென்னிஸ் வாழ்க்கையில் ஒரு கரும் புள்ளியாக அமைந்து விட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் கிம் கிளை ஸ்டர்சை எதிர்கொண்டார். முதல் செட்டை கிளைஸ்டர்ஸ் 6-4 என கைப் பற்றினார். இதனால் கோபமடைந்த செரினா, டென்னிஸ் ராக்கெட்டை உடைத்தார். இதையடுத்து போட்டி நடுவர், செரினாவுக்கு முதல் எச்சரிக்கை வழங்கினார்.
இந்நிலையில் 2வது செட்டில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய செரினா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் செரினா 5-6 என பின்தங்கிய நிலையில் சர்வீஸ் செய்த போது, லைன்அம்பயர் "புட்-பால்ட்' வழங்கினார். காலை சரியாக தான் வைத்ததாக கூறிய செரினா ஆத்திரமடைந்தார். லைன் அம்பயராக பணியாற்றிய பெண்ணை பார்த்து,""பந்தை தொண்டைக்கு நேராக அடித்து கொன்று விடுவேன்,'' என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சேர் அம்பயர் மற்றும் தொடரின் ரெப்ரியிடம் புகார் கூறப்பட்டது. இப்பிரச்னையில் செரினாவுக்கு 2வது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிராண்ட்ஸ்லாம் விதியின்படி ஒரு வீரர் அல்லது வீராங்கனைக்கு நடுவர் 2வது முறை எச்சரிக்கை வழங்கும் போது, எதிர் வீரர் அல்லது வீராங்கனைக்கு கூடுதலாக ஒரு பெனால்டி புள்ளி வழங்கப்படும். "மேட்ச் பாய்ன்ட்' நேரத்தில் இந்த புள்ளி கிளைஸ்டர்சுக்கு வழங்கப்பட, 6-4, 7-5 என வென்று, பைனலுக்கு முன்னேறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட செரினா பரிதாபமாக வெளியேறினார். இந்த சம்பவத்தை எல்லாம் அரங்கில் இருந்து செரினாவின் சகோதரியும், டென்னிஸ் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
இந்நிலையில் லைன் அம்பயரை மிரட்டியதை மறுத்த செரினா, திடீரென "புட்-பால்ட்' வழங்கியது அதிர்ச்சியில் ஏதோ கூறினேன். ஆனால் லைன் அம்பயருக்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை. மேலும், இதுவரை யாருடனும் சண்டையிட்டது கிடையாது என்று கூறியுள்ளார்.

0 comments: